ஒரு மாநில அரசு எப்படி மத்திய அரசின் சட்டத்தினை எதிர்க்கலாம்? மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

புதுதில்லி: மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவிற்கு எதிராக மம்தா தொடர்ந்த வழக்கில், ஒரு மாநில அரசு எப்படி மத்திய அரசின் சட்டத்தினை எதிர்க்கலாம் என்று மம்தாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக அறிவித்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
முதலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 இறுதித்தேதி என மத்திய அரசு கெடு விதித்திருந்தது. தற்பொழுது அந்த கெடுவானது அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் பொழுது மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நலத்திட்டங்களுக்கான மானியம் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்படுவதால் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறும் மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் உத்தரவின் பேரில், மாநில தொழில் துறை யின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த மனுவில் பயனாளர்களின் செல்போன் எண்களுடனும் ஆதார் எண்களை இணைக்கும் உத்தரவிற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, தன்னுடைய செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கப் போவது கிடையாது என்று அறிவித்து விட்டார்.
ஆதார் தொடர்பான பிற வழக்குகளுடன் மேற்கு வங்க மாநில அரசின் மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், 'கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பில் ஒரு மாநில அரசு எப்படி மத்திய அரசின் சட்டத்தினை எதிர்க்கலாம்? இதன் காரணமாகவே மாநில அரசுகள் கொண்டு வரும் சட்டங்களை மத்திய அரசும் எதிர்க்கிறது.' என்று கருத்து தெரிவித்தனர்.
அதே நேரம் மம்தா பானர்ஜி இந்த வழக்கினை ஒரு தனி நபராகவோ அல்லது குடிமகனாகவோ தொடருவது சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது அத்துடன் வழக்கில் தங்களது நிலையின் மாற்றிக் கொள்வதற்கு மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.
அதே நேரம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.